

சாகர்,
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டாக்டர் ஹரி சிங் கவுர் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்த மோசமான சம்பவம் நடைபெற்று உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் வார்டன், பேராசிரியர் சாந்தா பென் நேற்று இரவு சோதனையிட்டு உள்ளார். அப்போது கழிவறையில் பயன்படுத்தப்பட்ட நாப்கின் ஒன்றை பார்த்து உள்ளார். நாப்கினை ஒழுங்காக அப்புறப்படுத்தவில்லை என கோபம் கொண்டு உள்ளார். இதுதொடர்பாக மாணவிகளிடம் வார்டன் சாந்தா பென் விசாரணை செய்து உள்ளார், ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து மாணவிகளின் அந்தரங்க பகுதியை சோதனையிடுமாறு விடுதியில் இருந்த பெண் பணியாளர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இதனையடுத்து மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணை வேந்தர் வீட்டின் முன்னதாக போராட்டத்தை தொடங்கினர். சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். வார்டனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக துணை வேந்தர் ஆபி திவாரி பேசுகையில், என்னுடைய வீட்டிற்கு வந்த மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர், அவர்கள் என்னுடைய குழந்தைகள் போன்று. அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். இது மிகவும் வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது, என கூறிஉள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு மூன்று நாட்களில் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மூன்று பேர்கள் கொண்ட குழுவையும் அமைத்து உள்ளார் ஆர்பி திவாரி. இதற்கிடையே மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவின் மாணவ அமைப்புகளும் போராட்டம் நடத்தின. இவ்விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும், அதுவரையில் வார்டனை பணியை விட்டு செல்ல செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இச்சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.