

மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. தினந்தோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பொது மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வீட்டைவிட்டு வெளியே வர அனுமதி வழங்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய கடைகள் மட்டும் கால 7 மணி முதல் 11 மணி வரை திறந்து வைக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு ஓரளவு குறைந்து அனைத்து வகையான கடைகளையும் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் மாநில அரசு கொரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதை அளவு கோலாக கொண்டு தளர்வுகளை அறிவித்து உள்ளது. மாவட்ட, மாநகர பகுதிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கொரோனா பாதிப்பு சதவீதம் 5.56 ஆகவும், 32.51 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி உள்ள, தலைநகர் மும்பை 3-வது பிரிவில் வந்தது. எனவே 3-வது பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட தளாவுகள் நேற்று மும்பையில் அமலுக்கு வந்தது.
இதையடுத்து சுமார் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று மும்பையில் சலூன், அழகுநிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறந்து இருந்தன. மக்கள் ஆர்வமாக சென்று தங்களை அழகுப்படுத்தி கொண்டனர். இதேபோல காலை நேரத்தில் பூங்காக்கள், மைதானங்கள் திறந்து இருந்தன. அங்கு மக்கள் கூட்டமாக நடைபயிற்சியில் ஈடுபட்டதை காணமுடிந்தது. இதேபோல கடற்கரைகளிலும் நேற்று காலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதே நேரத்தில் திறக்க அனுமதி வழங்கி இருந்த போதும், மும்பையில் ஓட்டல்கள் பல இடங்களில் திறக்கப்படவில்லை. அவர்கள் வழக்கம் போல பார்சல், டெலிவிரியில் மட்டுமே ஈடுபட்டு இருந்தனர்.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஒருவரிடம் கேட்ட போது, இன்னும் 2, 3 நாட்களில் அனைத்து ஓட்டல்களும் செயல்பட தொடங்கும் என்றார். இதேபோல நேற்று பார், மதுபான கடைகளும் அதிக இடங்களில் திறக்கப்படவில்லை. ஒருசில இடங்களில் மட்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அங்கு மதுபிரியர்கள் காலை நேரத்திலேயே மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். மேலும் அவர்கள், நகரின் அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகளை திறக்கவேண்டும் எனவும், தற்போது ஆன்லைன் விற்பனை என்ற பெயரில் மதுக்கடைகள் அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்பதாகவும் குற்றம்சாட்டினர்.
மும்பை 3-வது பிரிவில் இடம்பிடித்ததால் நகரில் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் மூடியே இருந்தன. இந்தநிலையில் நேற்று முதல் பெஸ்ட் பஸ்கள் 100 சதவீத பயணிகளுடன் இயங்க தொடங்கின. கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போது பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே மின்சார ரெயில்களில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மும்பையில் தற்போது திருமணங்களில் அதிகபட்சம் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தளாவுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொதுமக்கள் எச்சரிகையுடன் இருக்க வேண்டும் என மாநகராட்சி கேட்டுகொண்டு உள்ளது. இது குறித்து டுவிட்டரில் மாநகராட்சி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மும்பைக்கு ஒரு நினைவூட்டல்! நாம் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளால் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், கொரோனா இல்லாத மும்பையை உருவாக்க வேண்டும் என்ற முக்கிய குறிகோளில் இருந்து விலகி சென்றுவிடக்கூடாது. பாதுகாப்புடன் அனைத்தும் திறக்கட்டும். அனைத்து முன்எச்சரிக்கைகளையும் பின்பற்றுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது அமலுக்கு வந்து உள்ள தளர்வுகள் வரும் 15-ந் தேதியுடன் முடிகிறது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதன் அடிப்படையில் கூடுதல் தளர்வுகள் அல்லது கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.