

அமராவதி,
ஆந்திராவில் வருகிற 9-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை உள்ளாட்சி தேர்தல்கள் நடக்கின்றன. இந்த தேர்தலில், எதிர்க்கட்சியான தெலுங்குதேசத்துக்கு ஆதரவாக மாநில தேர்தல் அதிகாரி ரமேஷ் குமாரும், தேர்தல் கமிஷனும் செயல்படுவதாக பஞ்சாயத்து ராஜ் மந்திரி ராமச்சந்திர ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தேர்தல் அதிகாரி ரமேஷ் குமாரின் அறிவுரைகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பின்பற்றக்கூடாது எனவும், மீறி பின்பற்றினால் தேர்தல் முடிந்தபிறகு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார். மேலும் தேர்தல் அதிகாரியை பைத்தியம் எனவும் அவர் கூறியிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய தேர்தல் அதிகாரி, மந்திரி ராமச்சந்திர ரெட்டியை உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை (21-ந் தேதி) வீட்டுக்காவலில் வைக்குமாறு மாநில டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார். மிகவும் அரிதான இந்த சம்பவத்தால் மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.