திருப்பதி கோவிலில் அலைமோதிய கூட்டம்: 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு தூங்கினர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் தங்கி தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டைகைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்படு கின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்த வெளியில் உணவு சாப்பிட்டு தூங்கினர்.
தற்போது திருப்பதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி அடைந்தனர். இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள சீலா தோரணம் வரை வரிசையில் காத்திருந்தனர். 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வார இறுதி விடுமுறை நாட்களில் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் இலவச தரிசன டிக்கெட்டுகளை கூடுதலாக வழங்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் நேற்று 73,093 பேர் தரிசனம் செய்தனர். 31,570 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.






