

புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தின் கைரானா தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்தவர் ஹுகும் சிங். பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த அவர் கடந்த பிப்ரவரியில் மரணம் அடைந்த நிலையில் அந்த தொகுதி காலியானது.
இதனை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மிரிகன்கா சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் ஹுகும் சிங்கின் மகள் ஆவார்.
இவருக்கு போட்டியாக தபசும் பேகம் என்பவரை ராஷ்டீரிய லோக் தள கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
இதேபோன்று உத்தர பிரதேசத்தின் நூர்புர் சட்டசபை தொகுதி வேட்பாளராக மறைந்த லோகேந்திர சவுகான் எம்.எல்.ஏ.வின் மனைவி அவனி சிங் நிறுத்தப்பட்டு உள்ளார்.
தொடர்ந்து, ஜார்க்கண்டின் கோமியா தொகுதிக்கு மாதவ் லால் சிங், உத்தரகாண்டின் தரளி தொகுதிக்கு முன்னி தேவி, மேற்கு வங்காளத்தின் மகேஷ்தலா தொகுதிக்கு சுஜித் கோஷ் ஆகியோரை அக்கட்சி நிறுத்தி உள்ளது. கட்சியின் மத்திய தேர்தல் குழு கூடி இறுதி முடிவை இன்று அறிவித்துள்ளது.