10 குழந்தைகள் பலி: உ.பி அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்


10 குழந்தைகள் பலி: உ.பி அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
x

Image Courtacy: PTI

உத்தரபிரதேச மாநில அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு வார்டில் நேற்று இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து தீயணைப்புத் துறை மற்றும் ராணுவ தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன. எனினும் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது. 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், துணை முதல்-மந்திரி பிரிஜேஷ் பதக் மற்றும் முதன்மை சுகாதார செயலர் ஆகியோரை சம்பவ இடத்துக்கு அனுப்பியதாக மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் இன்று, சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.

இதனிடையே, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஜான்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் என்.ஐ.சி.யூ.வில் நடந்த விபத்தில் குழந்தைகள் இறந்தது மிகவும் வருத்தமாகவும், மன வேதனையாகவும் இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று யோகி ஆதித்யநாத் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை தர இறைவனை பிரார்த்திக்கிறோம். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.

உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யாநாத் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். ஜான்சி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த யோகி அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு உ.பி. மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், "பதிவுசெய்யப்பட்ட எப்ஐஆரின் நிலை, பொறுப்பான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு ஏதேனும் இருந்தால் வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அதிகாரிகள் எடுத்த அல்லது முன்மொழிந்த நடவடிக்கைகள் குறித்தும் ஆணையம் அறிய விரும்புகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story