

திருவனந்தபுரம்,
திருவனந்தபுரம், ஆற்றுக்காலில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தமிழகத்தில் கற்புக்கரசியாக போற்றப்படும் கண்ணகி தான், பகவதி அம்மன் அவதாரமாக குடிகொண்டு இருப்பதாக தல புராணம் கூறுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள். இந்த வழிபாடு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இத்தகைய சிறப்புமிக்க ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் பொங்கல் திருவிழா கடந்த 1- ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்வான பொங்கல் வழிபாடு நேற்று நடந்தது.
நேற்று காலையில் வழக்கமான பூஜை, வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து 10.20 மணிக்கு கோவிலின் முன்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த அடுப்பில் மேல்சாந்தி கை விளக்கில் தீபம் எடுத்து வந்து பண்டார அடுப்பில் தீ மூட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது, மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், மேயர் ஸ்ரீகுமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து பெண்கள் குலவை ஒலிக்க, செண்டை மேள-தாளம், வாணவேடிக்கை நடந்தது. பின்னர் பல கிலோ மீட்டர் சுற்றளவில் தயாராக இருந்த பெண்கள் தங்கள் அடுப்புகளில் தீ மூட்டி பொங்கலிட்டனர்.
வழக்கம்போல இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் பக்தி பரவசத்துடன் பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்டனர். அவர்கள் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் பல கிலோ மீட்டர் சுற்றளவில் ஆங்காங்கே அடுப்பு கூட்டி பொங்கலிட்டனர். இந்த வழிபாட்டில் திரைப்பட மற்றும் தொலைக் காட்சி நடிகைகள் பிரியங்கா, சிப்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதியம் 12 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 2.15 மணிக்கு பொங்கல் பானைகளுக்கு புனித நீர் தெளித்து நிவேத்யம் செய்யப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட பூசாரிகள் ஈடுபட்டனர்.