குடும்பத்தை கைவிட்ட கணவன்... 4 மகள்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை

சவிதாவின் கணவர் அவரை பிரிந்து செல்ல, ஆண் குழந்தை இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது.
குடும்பத்தை கைவிட்ட கணவன்... 4 மகள்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தற்கொலை
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரபன் லோதி. இவரது மனைவி சவிதா. இந்த தம்பதிக்கு 4 பெண்கள் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரபன் லோதி, தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

அதன் பின்னர் சவிதா, தனியாக தனது 4 மகள்களையும் வளர்த்து வந்தார். அவர்களுக்கு சொந்தமான சிறிய நிலத்தில் சவிதா விவசாயம் செய்து வந்துள்ளார். இருப்பினும் குடும்பத்தை கவனித்துக் கொள்ள அவருக்கு போதுமான வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றைய தினம் சவிதா அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் சவிதாவின் குழந்தைகளை அவர்கள் தேடத் தொடங்கினர்.

அப்போது கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் சவிதாவின் 4 மகள்களும் சடலமாக கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த 5 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சவிதா தனது 4 மகள்களையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, பின்னர் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

சவிதாவின் மூத்த மகளுக்கு 7 வயதாகும் நிலையில், அவரது கடைசி மகள் 5 மாத குழந்தையாக இருந்துள்ளார். சவிதாவின் கணவர் அவரை பிரிந்து செல்ல, ஆண் குழந்தை இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனியாக 4 பெண் குழந்தைகளை வளர்த்து வந்ததால் ஏற்பட்ட மன அழுத்தம், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் சவிதா இந்த முடிவை எடுத்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com