

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் லட்சுமண். இவரது மனைவி சிவலீலா. இந்த தம்பதி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற் றோர் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டிருந்தனர். தம்பதிக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில், சிவலீலா குண்டாக இருப்பதால், அவருக்கு குழந்தை பிறக்காது என்று லட்சுமண் கூறி சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதுபோல், நேற்று முன்தினமும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்த சிவலீலா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அறிந்ததும் மாதநாயக்க னஹள்ளி போலீசார் விரைந்து வந்து சிவலீலாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதே நேரத்தில் சிவலீலாவின் பெற்றோர் போலீசாரிடம் பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் கூறினார்கள். மகள் குண்டாக இருப்பதாக கூறி, அவளுக்கு குழந்தை பிறக்காது என சொல்லி மதுபோதையில் லட்சுமண் சண்டை போட்டு சித்ரவதை செய்து வந்தார்.
மகளிடம் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்திருக்கிறார் என பெற்றோர் தெரிவித்தனர். இதுகுறித்து மாதநாயக்கன ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டாக இருப்பதால் குழந்தை பிறக்காது எனக் கூறி கணவர் சித்ரவதை செய்ததால் பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.