இளம்பெண்ணை கொன்று 50 துண்டுகளாக கூறுபோட்ட கணவர்...!

ஜார்கண்டில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்;இளம்பெண்ணை கொன்று 50 துண்டுகளாக கூறுபோட்ட கணவர்
இளம்பெண்ணை கொன்று 50 துண்டுகளாக கூறுபோட்ட கணவர்...!
Published on

ராஞ்சி

ஜார்கண்ட் மாநிலத்தில் இளம்பெண்ணை கொன்று 50 துண்டுகளாக கூறுபோட்ட கணவரின் கொடூர செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீண்ட காலம் தங்களுடன் சேர்ந்து வாழ்ந்த துணையை கொன்று ஆட்டை அறுப்பது போல அறுத்து பல துண்டுகளாக கூறுபோடும் கொடூரம் நாட்டில் தற்போது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் டெல்லியில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த ஸ்ரத்தா என்ற பெண்ணை அவரது காதலனே கொன்று 35 துண்டுகளாக கூறுபோட்டு காட்டில் வீசிய சம்பவம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்தது.

துளியும் ஈவு இரக்கமின்றி அரங்கேற்றப்பட்ட இந்த படுபாதக செயல் ஈர நெஞ்சத்தினர் அனைவருக்கும் வலியை கொடுத்தது. இந்த கொடூரத்தை அரங்கேற்றிய அப்தாப் என்ற கொடூரன் தற்போது காவல்துறையினரின் வசம் இருக்கிறார்.

இந்த பயங்கர சம்பவத்தின் சோக வடு மறைவதற்குள் ஜார்கண்டில் மற்றுமொரு இளம்பெண் தனது துணையால் கொல்லப்பட்டு துண்டாடப்பட்டு இருக்கிறாள்.

அங்குள்ள சாகிப்கஞ்ச் மாவட்டத்தின் போரியோ போலீஸ் நிலைய எல்லையில் வசித்து வந்தவர் ரூபிகா பகதின் (வயது 22). பழங்குடி இனத்தை சேர்ந்த இந்த இளம்பெண் தில்தார் அன்சாரி (28) என்பவரை காதலித்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

2 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். தில்தார் அன்சாரிக்கு, ரூபிகா 2-வது மனைவி ஆவார்.

இந்த சூழலில் தனது மனைவி மாயமானதாக தில்தார் அன்சாரி போரியோ போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

இதைப்போல இளம்பெண்ணின் குடும்பத்தினரும் தனது மகளை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தனர். அத்துடன் தில்தார் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போரியோ சந்தாலி கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு அங்கன்வாடி மைய கட்டிடத்தில் ஒரு பெண்ணின் கால் மற்றும் உடலின் சில பாகங்கள் கிடப்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சில பாகங்களை நாய் ஒன்று கவ்வி செல்வதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு கிடந்த 12 உடல் பாகங்களை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், அந்த பாகங்கள் இளம்பெண் ரூபிகாவுடையது என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தில்தார் அன்சாரியை உடனடியாக போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் தனது மனைவியை கொலை செய்து 50-க்கு மேற்பட்ட துண்டுகளாக கூறுபோட்டு வீசியதாக போலீசாரிடம் தெரிவித்தார். தன்மீது சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசில் புகார் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த போலீசார், அவரை கைது செய்ததுடன், மீதமுள்ள உடல் பாகங்களை தேடும் பணியிலும் இறங்கினர். இதில் மேலும் சில பாகங்கள் என மொத்தம் 18 பாகங்கள் இதுவரை கிடைத்துள்ளன. மீதமுள்ள பாகங்களையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

மரம் அறுக்கும் மின்சார எந்திரம் போன்ற கூர்மையான ஆயுதத்தால் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடந்து வருகிறது.

டெல்லியில் இளம்பெண்ணை கொன்று 35 துண்டுகளாக கூறுபோடப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு நீங்குவதற்குள் ஜார்கண்டிலும் இதைப்போன்று ஒரு சம்பவம் நடந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com