ஹைதராபாத்: பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு நகரத்தை சுத்தம் செய்யும் இஸ்லாமிய இளைஞர்கள்

ஹைதராபாத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு தெருக்களை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹைதராபாத்: பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு நகரத்தை சுத்தம் செய்யும் இஸ்லாமிய இளைஞர்கள்
Published on

ஹைதராபாத்,

நேற்று (திங்கள்கிழமை) பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் ஹைதராபாத் மாநகராட்சியுடன் இணைந்து நகரத்தை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி 100 இளைஞர்கள் ஒன்றிணைந்து பக்ரீத் பண்டிகையின் போது தெருக்களில் பலியிடப்பட்ட விலங்குகளின் மிச்சங்களை சுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இது குறித்து அந்த இளைஞர்கள் குழுவில் ஒருவராகிய இர்பான் கூறுகையில், ஒரு மாதத்திற்கு முன்பாகவே இந்த முயற்சி குறித்து திட்டமிடப்பட்டது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று நகரத்தில் உள்ள பள்ளிவாசல்களுக்கு 11000 கோணிப் பைகளை வழங்கினோம். பள்ளிவாசல்களில் தொழுகையின் போது இது குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடுவார்கள். இதன் மூலம் பொது மக்கள் கழிவுகளை சுத்தம் செய்ய அந்த பைகளை வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.

நகரத்தில் பல சமூகத்தினர் ஒன்றாக வாழும் பகுதிகளுக்குச் சென்று தெருக்களை சுத்தம் செய்து வருகின்றோம். பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விலங்குகளின் மிச்சங்களை சுத்தம் செய்ய 12 லாரிகளை அனுப்பியிருக்கிறோம். நகரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் எந்த கஷ்டத்திற்கும் உள்ளாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முயற்சியை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com