

ஐதராபாத்,
தெலங்கானா மாநிலம் சார்லபள்ளி ரெயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காலியான ரெயிலில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 ரயில் பெட்டிகள் தீக்கிரையாகின. ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சார்லபள்ளி ரெயில் நிலையத்தின் 5 மற்றும் 6-வது நடைமேடைகளுக்கு இடையே பராமரிப்புப் பணிகளுக்காக காலியான ரெயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) மாலை சுமார் 6:30 மணியளவில், இந்த ரெயிலின் கடைசி பெட்டியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி தீப்பிடிக்கத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக அருகில் இருந்த மற்ற பெட்டிகளுக்கும் தீ மளமளவெனப் பரவியதில் மொத்தம் 7 பெட்டிகள் தீயில் கருகி நாசமாகின.
தீ விபத்து குறித்து மாலை 6:35 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மின்சார இணைப்பைத் துண்டித்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைமேடைகளில் இருந்த பயணிகள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டதுடன், தீப்பிடித்த பெட்டிகள் மற்ற ரெயில்களிலிருந்து உடனடியாக பிரிக்கப்பட்டன. சுமார் 45 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு இரவு 7:15 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை எனத் தென் மத்திய ரெயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், தீப்பிடித்த பெட்டிகளுக்குள் இருந்த இருக்கைகள் மற்றும் உள் கட்டமைப்புகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளன. மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய ரெயில்வே துறை உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.