

ஐதராபாத்,
ஐதராபாத்தில் பேஸ்புக் நண்பரை நம்பி சினிமா பார்க்கச் சென்ற பெண்ணை, அந்த நபரே பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- ஐதராபாத்தைச்சேர்ந்த சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கந்தகட்லா பிக்ஷாபதி (வயது 23) என இளைஞருடன் பேஸ்புக் மூலமாக அறிமுகமாகியுள்ளார். இவர்களது பேஸ்புக் அறிமுகம் நாளடைவில் நட்பாக மாறியது.
இந்த நிலையில், பிக்ஷாபதி தனது தோழியை தன்னுடன் சினிமா பார்க்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனை நம்பிய அந்தப்பெண், பிக்ஷாபதியுடன் அண்மையில் வெளியான பத்மாவத் இந்திப்படத்தை பார்க்க சென்றுள்ளார். சினிமா தியேட்டரில், இளம்பெண்ணை சந்தித்ததும், தனது கொடூர குணத்தை காட்டிய பிக்ஷாபதி, தியேட்டருக்குள் வைத்தே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையால் வெதும்பி போன அந்த பெண், உடனடியாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தியேட்டரில் இருவரும் இருந்த இடத்திற்கு அருகே வேறு யாரும் இல்லாததால், தனிமையை பயன்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட பிக்ஷாபதி கட்டிட தொழிலாளி என விசாரணையில் தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அலட்சியமாக இருந்ததாக கூறி தியேட்டர் மீதும் நடவடிக்கை எடுக்கும் பணி துவங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.