ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம்: மக்கள் எதிர்ப்பை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி அனில் மாதவ் தவே

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மக்கள் தெரிவிக்கும் எதிர்ப்பை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்று மத்திய சுற்றுச்சூழல் மந்திரி அனில் மாதவ் தவே கூறினார்.
ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம்: மக்கள் எதிர்ப்பை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் மத்திய சுற்றுச்சூழல் மந்திரி அனில் மாதவ் தவே
Published on

புதுடெல்லி,

அனில் மாதவ் தவே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் காற்றில் மாசு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. காற்றில் மாசு அதிகரிப்பதை நாம் கட்டுப்படுத்தவேண்டும்.

சென்னை எண்ணூர் அருகே கடலில் கப்பல்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு பற்றி மத்திய கப்பல் போக்குவரத்து துறையிடம் விரிவான அறிக்கை கேட்டு இருக்கிறோம். அந்த அறிக்கை கிடைத்தவுடன் சுற்றுச்சூழல் அமைச்சகம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிய வந்துள்ளது. மக்கள் இத்திட்டத்தை விரும்பவில்லை என்றால், அதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும்.

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் திட்டம் குறித்து கர்நாடக அரசு மத்திய அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளதா? என்று கேட்கிறீர்கள். ஆனால் அந்த திட்டம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் எங்கள் அமைச்சகத்துக்கு வரவில்லை.

இவ்வாறு அனில் மாதவ் தவே கூறினார்.

அவரை தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் அஜய் நாராயண் ஜா கூறியதாவது:

எண்ணூர் அருகே கப்பல்கள் மோதி விபத்துள்ளானதை தொடர்ந்து கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனுப்பி வைத்தோம்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாசு கட்டுப்பாடு தொடர்பான நிறுவனம் ஒன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனம் மூலம் தினசரி அடிப்படையில் விரிவான அறிக்கையை கேட்டு இருக்கிறோம். இது தவிர தமிழக அரசும், கடலோர காவல் படையும் எங்களுக்கு அறிக்கை அனுப்பி வருகிறார்கள். அனைத்து நிறுவனங்களிடம் இருந்தும் முழுமையான தகவல் கிடைத்த பிறகு இது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அஜய் நாராயண் ஜா கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com