"நான் தனிப்பட்ட முறையில் வேதனையடைந்துள்ளேன்" - கைதான மாநில மந்திரி குறித்து மம்தா பானர்ஜி கருத்து

பார்த்தா சாட்டர்ஜி அப்படி ஒரு செயலைச் செய்ய முடியும் என்பதை நம்ப முடியவில்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
Image Courtesy : PTI  
Image Courtesy : PTI  
Published on

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69). இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இது குறித்து விசாரிக்க சிபிஐ-க்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து அமலாக்கத்துறையில் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்த வகையில், கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள மந்திரி பார்த்தாவின் வீட்டில் நேற்று முன்தினம் தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ. 20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் ஆசிரியர் நியமன முறைகேட்டுடன் தொடர்புடையதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் கடந்த 23 ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த நிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டதால் தான் வேதனையடைந்ததாகவும் அவர் அப்படி ஒரு செயலைச் செய்ய முடியும் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

பார்த்தா சாட்டர்ஜி கைது குறித்து மம்தா கூறுகையில், " நான் தனிப்பட்ட முறையில் வேதனையடைந்துள்ளேன். அவர் அப்படி ஒரு செயலைச் செய்ய முடியும் என்று என்னால் நம்ப முடியவில்லை. நான் ஊழலை ஆதரிக்கவில்லை. அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும் பரவாயில்லை. உண்மை சரியான நேரத்தில் வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com