

கொச்சி,
கேரளாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால், மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கும், பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. 450-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. பல லட்சம்பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக விமானம் மூலம் நேற்று காலை திருவனந்தபுரம் வந்தார். நேற்று வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசினார்.
2-வது நாளாக இன்றும் ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்து வருகிறார். கொச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி கூறியதாவது:- நான் இங்கு ஆதரவு தெரிவிக்கவே வந்திருக்கிறேன். அரசியல் செய்ய வரவில்லை. இந்த இயற்கை பேரிடரின் தன்மை குறித்து நான் கருத்து கூறவிரும்பவில்லை.
நேற்று, ஏராளமான நிவாரண முகாம்களுக்கு நான் சென்றேன். மக்கள் கவலையில் உள்ளனர். கேரளா முதல் மந்திரியிடம் நான் பேசினேன். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து வீடுகளை மறுகட்டமைப்பு செய்ய அரசு உதவுவது முக்கியமானது. இழப்பீடுதொகை விரைவாக வழங்க வேண்டும். மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும். மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது இவ்வாறு அவர் தெரிவித்தார்.