ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டி: காங்கிரசுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன்..!!

தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான காங்கிரசின் 2-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
Image Courtacy: ANI
Image Courtacy: ANI
Published on

புதுடெல்லி,

தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 55 இடங்களுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த சூழலில் மேலும் 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய 2-வது பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதில் முக்கியமாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் முகமது அசாருதீனுக்கு ஜூபிலி ஹில்ஸ் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இவர் ஏற்கனவே உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இந்நிலையில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதி தனக்கு ஒதுக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் நன்றி தெரிவித்தார்.

இதுதொடர்பாக பேசிய அவர், "தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் என்னை நிறுத்தியதற்காக காங்கிரஸ் கட்சிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி , சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, டிபிசிசி தலைவர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஜூப்ளி ஹில்ஸில் என்னை களமிறங்கியதில் மகிழ்ச்சி. கடவுளின் ஆசீர்வாதத்துடன் தேர்தலில் வெற்றி பெற முயற்சிப்போம்" என்று வீடியோ அறிக்கை ஒன்றில் முகமது அசாருதீன் கூறினார்..

முன்னதாக தெலுங்கானா வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கட்சியின் மத்திய தேர்தல் பணிக்குழு நேற்று காலையில் கூடி ஆய்வு செய்தது. கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com