‘எனக்கும் பிரதமருக்கும் மனைவி பிரச்சினைகள் இல்லை’ - மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சால் சிரிப்பலை

பிரதமருக்கும், தனக்கும் மனைவியிடம் இருந்து அறிவுரைகள் கிடைப்பதில்லை என ராகுல் காந்தி நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
‘எனக்கும் பிரதமருக்கும் மனைவி பிரச்சினைகள் இல்லை’  - மக்களவையில் ராகுல் காந்தியின் பேச்சால் சிரிப்பலை
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்படுகிறது.

மகளிருக்கான இட ஒதுக்கீடு அமலாக்கத்திற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறையையும், காலாவதியான 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் அடிப்படையாகக் கொண்டு நியாயமற்ற அரசியல் ஆதாயம் தேடுகிறது என்று அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், 2-வது நாளாக இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “இங்கு இருக்கும் அனைவரும் நமது வீட்டில் இருக்கும் பெண்களான தாய், சகோதரி மற்றும் மனைவியிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால் பிரதமருக்கும், எனக்கும் மனைவி பிரச்சினைகள் இல்லை. எனவே, மனைவியிடம் இருந்து எங்களுக்கு அறிவுரைகள் கிடைப்பதில்லை” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “நேற்றைய தினம் எனது சகோதரி பிரியங்கா காந்தி தனது பேச்சின்போது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திவிட்டார். அதாவது அமித்ஷாவை சிரிக்க வைத்துவிட்டார். எனது 20 வருட அரசியல் வாழ்க்கையில் என்னால் செய்ய முடியாததை, 5 நிமிடங்களில் எனது தங்கை செய்துவிட்டார். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மக்களவையில் நேற்று பிரியங்கா காந்தி பேசுகையில், “மத்திய உள்துறை மந்திரியின் அரசியல் தந்திரத்தைக் கண்டு அந்த சாணக்கியரே அதிர்ச்சி அடைந்திருப்பார்” என்று கூறினார். அதைக் கேட்டு அமித்ஷா உள்பட அவையின் மூத்த உறுப்பினர்கள் பலர் சிரித்தனர். அந்த உரையாடலை ராகுல் காந்தி இன்று குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com