‘அவனை கொல்வதற்கு பதிலாக திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே..’ - புனே வழக்கில் மகனை இழந்த தந்தை வேதனை

சியா கோயல் தனது காதலனுடன் சேர்ந்து, இளம் தொழிலதிபர் கேதன் விஷாலை மலையில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.
‘அவனை கொல்வதற்கு பதிலாக திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே..’ - புனே வழக்கில் மகனை இழந்த தந்தை வேதனை
Published on

மும்பை,

சியா கோயலுக்கு ஏதாவது அதிருப்தி இருந்திருந்தால், தனது மகனை கொல்வதற்கு பதிலாக திருமண ஏற்பாடுகளை அந்த பெண் நிறுத்தியிருக்கலாமே என்று உயிரிழந்த கேதன் விஷாலின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

நிச்சயதார்த்தம்

புனே ககுஞ்சே பகுதியைச்சேர்ந்தவர் இளம் தொழில் அதிபர் கேதன் விஷால் அகர்வால்(வயது 26). இவரது குடும்பத்தினர் ரியல் எஸ்டேட் துறையில் தடம் பதித்து பெரும் பணம் படைத்தவர்களாக விளங்குகின்றனர்.

இவருக்கும், மசாலா மற்றும் முந்திரி வியாபாரம் செய்யும் குடும்பத்தை சேர்ந்த சியா கோயல்(20) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற நவம்பர் மாதம் திருமணத்தை நடத்த இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதால், இளம் ஜோடியினர் பல இடங்களுக்கு சென்று வந்தனர்.

400 அடி பள்ளத்தாக்கில்..

இந்தநிலையில் சியா கோயல் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கேதன் விஷாலை புனே அருகில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லோஹாகாட் கோட்டைக்கு கடந்த 18-ந்தேதி அழைத்திருந்தார். அன்று இருவரும் ஜோடியாக மலையேற்றம் சென்றனர்.

மலையில் உள்ள செங்குத்தான பாறையில் புகைப்படம் எடுத்தபோது, கேதன் விஷால் எதிர்பாராதவிதமாக 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டார் என சியா கோயல் அங்கிருந்த பாதுகாவலர்களிடம் அழுதுகொண்டே கூறினார். இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று, சுமார் 3 மணிநேரம் போராடி கேதன் விஷாலை சடலமாக மீட்டனர். போலீசார் இதனை விபத்து எனக்கருதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பெண்ணின் கோர முகம்

ஆனால் கேதன் விஷாலின் குடும்பத்தினருக்கு இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி போலீசார் நடத்திய புலன் விசாரணையில் இளம்பெண் சியா கோயல் தனது காதலனுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி, தனக்கு திருமணம் நிச்சயித்த இளம் தொழில் அதிபரை மலையில் இருந்து தள்ளிக்கொன்றது வெளிச்சத்துக்கு வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவளை தூக்கில் போடுங்கள்...

இந்த கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இளம்பெண் சியா கோயலையும், அவரது காதலனான பாபுலால் சவுத்ரி(22) என்ற வாலிபரையும் கைது செய்து புனே மாவட்டம் மாவல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வருகிற 29-ந்தேதி வரை அவர்களை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. விசாரணைக்குப்பிறகு அவர்கள் சிறையில் கம்பி எண்ண உள்ளனர்.

திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே...

இதற்கிடையில், கொல்லப்பட்ட கேதன் அகர்வாலுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்ததாகவும், அது குறித்து சியா கோயலுக்கு அதிருப்தி இருந்தது என்றும் ஒரு தகவல் பரவியது. இது குறித்து கேதன் அகர்வாலின் தந்தை விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “சில மருத்துவ காரணங்களால் எனது மகனுக்கு லேசான முடி உதிர்வு பிரச்சினை இருந்தது உண்மைதான். ஆனால் இது குறித்து முன்கூட்டியே மணப்பெண் வீட்டாரிடம் தெரிவித்துவிட்டோம். ஒருவேளை சியா கோயலுக்கு ஏதாவது அதிருப்தி இருந்திருந்தால், என் மகனை கொல்வதற்கு பதிலாக, திருமண ஏற்பாடுகளை நிறுத்தியிருக்கலாமே” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com