ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றேன்: தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பேச்சால் சர்ச்சை

தெலங்கானாவில் உள்ள அரசியல் கட்சிகள் ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ரேவந்த் ரெட்டி
Published on

ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றதாக தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.2-ம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாஜி ஆட்சிக்காலத்தில், "ஹைட்ரா" என்ற பெயரில் ஒரு ரகசிய அறிவியல் பிரிவு செயல்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அமைப்பு பல்வேறு கொடூர நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரேவந்த் ரெட்டி, “ஹிட்லரின் ஹைட்ரா அமைப்பு எந்த நபரையும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கும் திறன் கொண்டதாக இருந்தது. அந்த பெயரில் இருந்த உந்துதலின் அடிப்படையில், தெலங்கானா அரசின் பேரிடர் மீட்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு ‘ஹைட்ரா’ என்று பெயரிட்டேன். “இந்த ஹைட்ரா அமைப்பு ஐதராபாத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது.

தெலங்கானாவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களிலும் பின்பற்றலாம். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதன் மூலம் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் திறம்பட மேற்கொள்ள முடியும்” என்றும் அவர் கூறினார். ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்து தெலுங்கானா அரசியலில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com