39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என கடந்த 3 வருடங்களாக கூறிவந்தேன்; உயிர் தப்பியவர் பேட்டி

ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிய 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என கடந்த 3 வருடங்களாக கூறி வந்தேன் என தப்பி வந்த ஹர்ஜீத் மசீ இன்று கூறியுள்ளார். #HarjitMasih
39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என கடந்த 3 வருடங்களாக கூறிவந்தேன்; உயிர் தப்பியவர் பேட்டி
Published on

சண்டிகார்,

ஈராக்கில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த 40 இந்தியர்கள் கடந்த 2015ம் ஆண்டு ஜூனில் ஐ.எஸ். அமைப்பினரால் கடத்தப்பட்டனர். ஆனால் அவர்களில் ஒருவர் வங்காளதேச முஸ்லிம் என கூறி அங்கிருந்து தப்பி விட்டார்.

இந்த நிலையில் 3 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன என்றும் மத்திய வெளிவிவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று நாடாளுமன்ற மேலவையில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த ஹர்ஜீத் மசீ பஞ்சாபில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கலா ஆப்கானா கிராமத்தில் வசித்து வருகிறார்.

அவர் இன்று கூறும்பொழுது, 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டனர் (ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால்) என கடந்த 3 வருடங்களாக நான் கூறி வருகிறேன். நான் உண்மையையே பேசி வந்தேன் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், எனது கண் முன்னாலேயே அனைவரும் கொல்லப்பட்டனர். இதனை கடந்த வருடங்களில் நான் கூறி வந்தேன். நான் கூறிய விசயம் அரசால் ஏன் ஏற்கப்படவில்லை என ஆச்சரியம் தருகிறது.

தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இந்தியர்களான எங்களை தீவிரவாதிகள் கடத்தினர். அவர்களது பிடியில் சில நாட்கள் வைத்திருந்தனர். ஒரு நாள் எங்களை மண்டியிட செய்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட தொடங்கினர். எனது தொடையில் குண்டு ஒன்று பாய்ந்தது. இதனால் நான் சுயநினைவற்று விழுந்தேன். துரதிருஷ்டவச முறையில் நான் உயிர்பிழைத்தேன். அதன்பின்னர் அங்கிருந்து தப்பி இந்தியா வந்தேன் என கூறியுள்ளார்.

கொல்லப்பட்ட இந்தியர்களில் பலர் பஞ்சாபின் அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், ஹோசியார்பூர், கபுர்தலா மற்றும் ஜலந்தர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com