‘அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது’ - மம்தா பானர்ஜி

நிலக்கரி ஊழல் பணம் டெல்லியில் உள்ள தலைவர்களிடம் சென்று சேர்ந்துள்ளது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் ஐ.டி. பிரிவுத் தலைவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனைகளை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடத்தினார். இதன் பின்னர் பேசிய அவர், “நிலக்கரி ஊழல் பணம் டெல்லியில் உள்ள தலைவர்களிடம் சென்று சேர்ந்துள்ளது. என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் அதை நான் வெளியிடுவேன்.
நிலக்கரி ஊழல் பணம் பா.ஜ.க.வை சேர்ந்த சுவேந்து அதிகாரி மூலம் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு போயிருக்கிறது. அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது. நான் வழக்கமாக எதிர்வினை ஆற்றுவதில்லை. ஆனால் யாராவது என்னைத் தூண்டிவிட்டால், நான் அவர்களை விடமாட்டேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






