சாலையில் வேகமாக சென்றதற்காக நானும் அபராதம் செலுத்தி இருக்கிறேன் - மத்திய மந்திரி நிதின்கட்காரி

சாலையில் வேகமாக சென்றதற்காக நானும் அபராதம் செலுத்தியுள்ளேன் என்று சாலை போக்குவரத்து மந்திரி நிதின்கட்காரி கூறினார்.
சாலையில் வேகமாக சென்றதற்காக நானும் அபராதம் செலுத்தி இருக்கிறேன் - மத்திய மந்திரி நிதின்கட்காரி
Published on

மும்பை,

மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி மோடி அரசின் 100 நாள் சாதனை குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி அரசின் 100 நாட்கள் சாதனை என்பது வெறும் டிரெய்லர் தான். முழு படமும் அடுத்த 5 ஆண்டுகளில் வெளிவரும். மோட்டார் வாகன சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது பெரிய சாதனை. அதிகமான அபராதம் விதிப்பது வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும், ஊழலை ஒழிக்கவும் பயன்படும்.

நானும் மும்பை பாந்த்ரா- வோர்லி சாலையில் வேகமாக சென்றதற்காக அபராதம் செலுத்தியுள்ளேன். மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள 6 மாவட்டங்கள் 5 ஆண்டுகளில் டீசல் பயன்பாடு இல்லாத பகுதிகளாக மாற்றப்படும். அங்கு வாகனங்கள் உயிரி எரிபொருள் மூலம் இயக்கப்படும்.

மத்திய அரசின் முதல் சாதனை முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றியது தான். இதன்மூலம் முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. இது வரலாற்று சாதனை. மற்றொரு முக்கிய சாதனை காஷ்மீர் மாநிலத்தின் 370-வது சட்டப்பிரிவை ரத்துசெய்தது. காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவால் தான் வறுமையும், பட்டினியும் நிலவியது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூலம் அங்கு வன்முறையை பரப்பி வந்தது. கல்வீச்சாளர்களும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்து வந்தனர். காஷ்மீரில் எனது துறை சார்பில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலானவை சுரங்கப்பாதை மற்றும் சாலைகள் அமைப்பது.

நாட்டில் இப்போது 2 ரெயில் நிலையங்களில் மட்டும் மண் குவளையில் டீ வழங்கப்படுகிறது. விரைவில் 400 ரெயில் நிலையங்களில் இந்த வசதி கிடைக்கும் என்று ரெயில்வே மந்திரி உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடி இந்தியாவை மிகப்பெரிய பொருளாதார சக்தி படைத்த நாடாக மாற்றுவார். இவ்வாறு நிதின்கட்காரி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com