"வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்

வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்திறன் மீது தனக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.
"வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" - காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்
Published on

ராய்பூர்,

சத்தீஸ்கா மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு தக்க பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;-

"வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது. நான் துவக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது."

இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com