நான் இனி அனைவருக்கும் பொதுவானவன்: மேற்கு வங்காள முதல் மந்திரி சுவேந்து அதிகாரி

மேற்கு வங்காள முதல்-மந்திரியாக சுவேந்து அதிகாரி இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.
நான் இனி அனைவருக்கும் பொதுவானவன்: மேற்கு வங்காள முதல் மந்திரி சுவேந்து அதிகாரி
Published on

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. 15 ஆண்டு கால மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு முடிவு கட்டியது. மேற்கு வங்காள மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இதில் ஒரு தொகுதியை தவிர்த்து மற்ற 293 தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பா.ஜனதா 207 இடங்களை கைப்பற்றியது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரசுக்கு 80 இடங்களே கிடைத்தது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பா.ஜனதா சட்டமன்ற குழுத் தலைவராகவும், முதல்-மந்திரியாகவும் சுவேந்து அதிகாரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை திலீப் கோஷ் முன்மொழிந்தார்.பின்னர் கவர்னர் மாளிகைக்கு சுவேந்து அதிகாரி, பா.ஜனதா மூத்த தலைவர்களுடன் சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்று அவரை புதிய அரசு அமைக்கும்படி கவர்னர் கேட்டுக்கொண்டார்.இந்த நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியாக சுவேந்து அதிகாரி இன்று காலை பதவியேற்றுக்கொண்டார்.

அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.சுவேந்து அதிகாரியுடன் மேலும் 5 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநில முன்னாள் தலைவருமான திலீப் கோஷ், அக்னிமித்ரா பால், அசோக் கீர்த்தனியா, நிஷித் பிராமணிக், குசுதிராம் டுடு ஆகியோரும் பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். முதல்-மந்திரியாக பதவியேற்ற சுவேந்து அதிகாரி, மோடியின் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். அவரை மோடி கட்டியணைத்து முதுகில் தட்டிக்கொடுத்தார்.

பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி கூறியதாவது: இந்த நாள் நாட்டுக்கும் மேற்கு வங்காளத்திற்கு மிகவும் முக்கியமான நாள். ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாளான இன்று, புதிய அரசு பதவியேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி விரும்பினார். அதன் காரணமாக, பிரதமர் மோடியின் தலைமையில் ரவீந்திரநாத் தாகூருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பதவியேற்பு விழா நடத்தப்பட்டது. ஜோராசங்காவில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் பிறந்த இல்லத்துக்குச் சென்று வணங்கிய பிறகே நான் எனது முதல்வர் பணிகளை தொடங்க உள்ளேன். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிக்கு வேறு எந்தச் சான்றிதழும் தேவையில்லை. நான் இப்போது முதல் மந்திரியாக இருக்கிறேன். நான் அனைவருக்கும் பொதுவானவன். தேர்தல் முடிவுகளைப் பற்றியே இன்னும் விவாதித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல புத்தி கிடைக்கட்டும்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com