கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்; எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக முதல் அமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்கிறேன் என அறிவித்துள்ளார்.
கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்; எடியூரப்பா அறிவிப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வஜுபாய் வாலா உத்தரவிட்டார்.

ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 19ம் தேதி மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

இந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் 3.30 மணியளவில் கூடிய சட்டப்பேரவையில் பதவியேற்காமல் இருந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்று கொண்டனர். இதன்பின் எடியூரப்பா அவையில் பேசினார். அவர் பேசும்பொழுது, கர்நாடக விவசாயிகளுக்காக இறுதி மூச்சு உள்ளவரை சேவை செய்வேன் என கூறினார்.

தொடர்ந்து அவர், கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபொழுதிலும் மோடி எந்த வேற்றுமையையும் காட்டவில்லை.

கர்நாடக மக்கள் மதிப்பு, மரியாதையுடன் வாழ நினைக்கின்றனர். மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், மதசார்பற்ற ஜனதா தளமும் ஒன்று சேர்ந்துள்ளனர். விவசாயிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை.

பாரதீய ஜனதாவுக்கு வாக்களித்த கர்நாடக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற நிலையில் எங்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 113 இடங்களை எங்களுக்கு மக்கள் அளித்து இருந்தால் இந்த நிலை இருந்திருக்காது என பேசினார். தொடர்ந்து உருக்கமுடன் பேசிய அவர் கர்நாடக முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறினார்.

அவர் பதவியேற்ற 56 மணிநேரத்தில் ராஜினாமா செய்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜினாமா கடிதத்தினை அளிக்க ஆளுநர் மாளிகை நோக்கி எடியூரப்பா சென்றுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com