"நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு தலை வணங்குகிறேன்" - ராம்நாத் கோவிந்த்

தனது பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டுமக்களுக்கு உரையாற்றினார்.
"நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு தலை வணங்குகிறேன்" - ராம்நாத் கோவிந்த்
Published on

புதுடெல்லி,

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார். புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு வழிவிட்டு மாளிகையிலிருந்து ராம்நாத் கோவிந்த் இன்று வெளியேறுகிறார். இந்நிலையில், நாட்டு மக்களிடையே ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது;

சாதாரண குடும்பத்தில் பிறந்த தனக்கு நாட்டிற்கு சேவை புரிய வாய்ப்பு கிடைத்தது ஜனநாயகத்தின் சிறப்பாகும். நமது நாட்டின் துடிப்பான ஜனநாயக அமைப்பின் சக்திக்கு தலை வணங்குகிறேன். அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள், சமூக சேவை செய்பவர்கள், பல மதங்களின் ஆச்சாரியர்கள், குருமார்கள் அனைவரும் எனக்கு நல்ல ஒத்துழைப்பு நல்கினர்.

இளைஞர்கள், தங்களது கிராமங்கள் மற்றும் தங்கள் படித்த பள்ளிகளுடன் எப்பொதும் தொடர்பில் இருங்கள். தற்போது நாம் சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டை கொண்டாடி வருகிறோம். 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் அடிமை வாழ்வை எதிர்த்து பல பகுதிகள் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டத்தில் பங்குகொண்ட தியாகிகளை நாம் கர்வத்தோடு நினைத்துப்பார்க்கிறோம்.

அரசியல் நிர்ணய சட்டம் அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்பு அந்த அவையில் பேசிய அம்பேத்கர், நமது ஜனநாயகத்தை சாதாரண மக்களின் ஜனநாயகமாக மாற்றவேண்டும் என கூறினார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை நிலைநாட்டப்பட வேண்டும்.

ஏழை எளியோருக்கும் பலன்கள் கிடைப்பதற்கு ஆட்சியாளர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும். இந்த திசையில் நாம் முன்னேற்றமடைய முக்கியமானது கல்வி. இளைஞர்கள் கல்வியில் முன்னேறவேண்டுமானால், சுகாதாரம் அவசியம். கல்வி, சுகாதாரம் இவற்றை பயன்படுத்தி நாம் வளர்ச்சியடைய முடியும்.

21 ஆம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்ற நம் நாடு பாடுபட்டு வருகிறது. எனது ஐந்து ஆண்டு கால பதவியில் எனது பணியை சிறப்பாக ஆற்றியுள்ளேன். நான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோது முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பிரனாப் முகர்ஜி எனக்கு அறிவுரைகளை வழங்கினார். நாம் செய்யும் பணியில் ஏழைகளுக்கு பயன் இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும் என்றார்.

நாம் நீர், காற்று மாசடையாமல் காக்க வேண்டும். மரங்கள் ஆறுகள், மலைகள் போன்றவற்றை பேணிக்காக்க வேண்டும். எனது பதவிக்காலத்தை முடிக்கும் எவ்வேளையில் நான் நாட்டுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com