‘கடினமான நினைவுகளுடன் போராடுகிறேன்’ - ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்தவர் உருக்கம்

ஏர் இந்தியா விமான விபத்து நிகழ்ந்து இன்றோடு ஓராண்டு கடந்துள்ளது.
‘கடினமான நினைவுகளுடன் போராடுகிறேன்’ - ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்தவர் உருக்கம்
Published on

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஆண்டு ஜீன் மாதம் 12-ந்தேதி புறப்பட்ட விமானம், பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அருகில் இருந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரி விடுதிக் கட்டிடத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் வெடித்து சிதறியதில் அதில் இருந்த 241 பேர், மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த 5 எம்.பி.பி.எஸ். மாணவர்கள், பொதுமக்கள் 14 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த விஸ்வாஸ் குமார்(வயது 39) என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகி உருக்குலைந்து இருந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. விபத்தில் உயிரிழந்த இங்கிலாந்து, போர்ச்சுகல் மற்றும் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த கோர விபத்து நிகழ்ந்து இன்றோடு ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இன்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் நீங்காத நினைவுகளுடன் தவித்து வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் இன்று, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை வைத்து அவர்களின் குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், ஏர் இந்தியா சார்பில் தங்கள் நிறுவன ஊழியர்களை இன்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான விஸ்வாஸ் குமார், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். விமான விபத்தில் விஸ்வாஸ் குமாரின் சகோதரர் அஜய் உயிரிழந்தார். தனது சகோதரரின் மரணம் தன்னை மனதளவில் மாற்றிவிட்டது என்று விஸ்வாஸ் குமார் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “நான் உயிர் பிழைத்திருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் என்னை பின்தொடரும் சவால்களை அவர்கள் எப்போதும் பார்ப்பதில்லை. நான் இன்னும் தூக்கமின்மை, பதட்டம் மற்றும் கடினமான நினைவுகளுடன் போராடுகிறேன்.

விபத்து நிகழ்ந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில், நான் இன்னும் என் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், என்னால் முடிந்தவரை என் குடும்பத்தை ஆதரிக்கவும் முயற்சிக்கிறேன்.

நான் உயிருடன் இருப்பதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால் விபத்தில் இருந்து உயிர் பிழைத்த பிறகு நான் எதிர்கொண்டவை எல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மிகவும் கடினமானவை” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com