நள்ளிரவு 2 மணி வரை கண்காணித்துக் கொண்டு இருந்தேன்; மேற்கு வங்க அரசு மீது தலைமை நீதிபதி கோபம்

மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஈடுபட்டுள்ள 7 நீதிபதிகளை பிணைக்கைதிகளாக நடத்தியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
நள்ளிரவு 2 மணி வரை கண்காணித்துக் கொண்டு இருந்தேன்; மேற்கு வங்க அரசு மீது தலைமை நீதிபதி கோபம்
Published on

மேற்​கு​வங்​கத்​தின் மால்டா மாவட்​டத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்​கை​யின் (எஸ்ஐஆர்) போது வாக்​காளர் பெயர்​கள் நீக்​கப்​பட்​டது தொடர்​பாக புகார் எழுந்​தது. இது குறித்து ஆய்வு செய்​வதற்​காக சுப்ரீம் கோர்ட்டு உத்​தர​வுப்​படி பணி​யில் அமர்த்​தப்​பட்ட நீதித்​துறை அதி​காரி​கள் மால்டா மாவட்​டம் கலி​யாசக் வட்​டார வளர்ச்சி அலு​வல​கத்​துக்கு நேற்று முன்​தினம் சென்​றனர்.அங்கு நேற்றுமுன்தினம் குவிந்திருந்த போராட்​டக்​காரர்​கள், வட்​டார வளர்ச்சி அலு​வல​கத்​தைச் சூழ்ந்து கொண்டு அங்​கிருந்த 3 பெண் அதி​காரி​கள் உட்பட 7 அதி​காரி​களை சிறை வைத்​தனர். 9 மணி நேரத்​துக்​குப்​பிறகு அங்கு போலீ​ஸார் சென்​று, போராட்​டக்​காரர்​கள் மீது தடியடி நடத்தி சிறைவைக்​கப்​பட்ட அதி​காரி​களை நேற்று அதிகாலை 1 மணி​யள​வில் மீட்​டனர். இந்த விவ​காரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்ய காந்த தலை​மையி​லான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி காட்டமாக கூறியதாவது:

ஏப்ரல் 1-ந்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு 7 நீதிபதிகளையும் ஒரு கும்பல் முற்றுகையிடத் தொடங்கியது. இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல் மாநில அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். இரவு 8.30 மணி வரை, மாநில அதிகாரிகள் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.உணவு, தண்ணீர் கொடுக்கவில்லை. பிறகு பதிவாளர் ஜெனரல், மாநில உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை தொடர்பு கொண்டார். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நீதிபதிகளுக்கு உணவு, தண்ணீர் கூட கொடுக்க அனுமதிக்கப்படவில்லை. அதையடுத்து, ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நேரடியாக தலையிடும் நிலைக்கு தள்ளப்பட்டார். உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை அழைத்தார். இருவரும் தலைமை நீதிபதி வீட்டுக்குச் சென்றனர். நள்ளிரவுக்குப் பிறகு, நீதிபதிகள் விடுவிக்கப்பட்டனர்.

நீதிபதிகளின் பாதுகாப்பை தேர்தல் கமிஷன் உறுதி செய்ய வேண்டும். அவர்கள் அருகே 5 பேருக்கு மேல் திரள அனுமதிக்கக்கூடாது. நீதிபதிகள் பணியாற்றும் இடங்களில் போதிய மத்திய படைகளை அமர்த்த வேண்டும். நீதிபதிகளை பிணைக்கைதிகளாக்கி முற்றுகையிட்ட சம்பவம் குறித்த விசாரணையை சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ.விடம் தேர்தல் கமிஷன் ஒப்படைக்க வேண்டும். இதற்கு உடன்படுவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்கு வங்காள தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு அவர்கள் 4 பேரும் விளக்கம் அளிக்க வேண்டும். 6-ந்தேதி விசாரணையின்போது, 4 பேரும் ஆன்லைனில் ஆஜராக வேண்டும்.நீதிபதிகள் மனதில் அச்சத்தை உருவாக்கும் வகையில் யாரும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது மாநில அரசின் முழுமையான தோல்வியை காட்டுகிறது தேர்தல் கமிஷன் எதிரியாக செயல்படக்கூடாது என்று மேற்கு வங்காள அரசு அட்வகேட் ஜெனரல் கூறினார். அதற்கு தலைமை நீதிபதி, "துரதிருஷ்டவசமாக உங்கள் மாநிலத்தில் ஒவ்வொருவரும் அரசியல் ரீதியாக பேசுகிறீர்கள். எங்களை கருத்து கூற வைக்கிறீர்கள். அந்த சமூக விரோதிகள் யார் என்று எங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்களா? நான் நள்ளிரவு 2 மணி வரை கண்காணித்துக் கொண்டிருந்தேன். மிக மிக துரதிருஷ்டவசமானது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com