

புதுடெல்லி,
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி விலகக் கோரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அகில இந்திய மாணவர் சங்க தலைவர் நேஹா போராவுக்கு கடந்த 17-ந் தேதி டெல்லி போலீசார் ஒரு நோட்டீஸ் அனுப்பினர்.
அதில், சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி, அமைதியை பேணுவதாக ரூ.10 ஆயிரத்துக்கான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திடுமாறு கூறப்பட்டு இருந்தது. அந்த நோட்டீசை எதிர்த்து நேஹா போரா தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
“நான் அமைதி உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன். யாருடைய அமைதியை நான் காக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்? அமைதியாக போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை. அரசாங்கத்தை கேள்வி கேட்பது எப்படி அமைதிக்கு அச்சுறுத்தலாக அமையும்? ஞானேஷ்குமாருக்கு எதிரான போராட்டம் எந்த திசையில் சென்றாலும், இந்த உரிமையை பறிக்கக்கூடாது.”
இவ்வாறு அவர் கூறினார்.