பிரதமர் மோடியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்... சத்தீஷ்கார் முதல்-மந்திரி

சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் பதன் தொகுதியில் இருந்து மீண்டும் போட்டியிட உள்ளார்.
பிரதமர் மோடியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்... சத்தீஷ்கார் முதல்-மந்திரி
Published on

ராய்ப்பூர்,

தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை கடந்த மாதம் 9-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி சத்தீஷ்காரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்காரில் முதல் கட்டத்தில் 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்டத்தில் 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் பதன் தொகுதியில் இருந்து சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் மீண்டும் போட்டியிட உள்ளார். அவருடைய மருமகன் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்தவரான விஜய் பாகெல் என்பவரை அவருக்கு எதிராக அக்கட்சி நிறுத்தி உள்ளது.

ஜனதா காங்கிரஸ் தலைவரான அமித் ஜோகியும் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால், இந்த தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், முதல்-மந்திரி பூபேஷ் பாகெல் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அவர் பேசும்போது, அதானிக்கு எதிராக எப்போது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? என பிரதமர் மோடியிடம் நான் கேட்க விரும்புகிறேன். சத்தீஷ்கார் மக்களுக்கு நீங்கள் (பிரதமர் மோடி) என்ன செய்ய போகிறீர்கள்? என்றும் நான் கேட்க விரும்புகிறேன் என்று பேசியுள்ளார்.

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஷ்காரில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு இன்று பேசும்போது, பா.ஜ.க.வுக்கு பெரிய ஆதரவு உள்ளது. அதனை காங்கரில் காண முடிகிறது. சத்தீஷ்காரில் காங்கிரஸ் கட்சி ஊழலில் ஈடுபடுகிறது. அவர்களுடைய தலைவர்கள் சொந்த நலனுக்காக வேலை செய்கிறார்கள் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

காங்கிரசும், வளர்ச்சியும் ஒன்றாக இணைந்திருக்க முடியாது என குறிப்பிட்ட அவர், சத்தீஷ்காரின் அடையாளம், பழங்குடியினரின் உரிமைகள் மற்றும் பிற்பட்டோர் பிரிவுகள் வலுப்பட வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் குறிக்கோள் என்றும் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com