பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு

பெங்களூரு மாநகராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு
Published on

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சியில் நடைபெற்ற வளர்ச்சி பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கால்வாய் பணிகள்

பெங்களூரு மாநகராட்சியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற வளர்ச்சி பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. அதையடுத்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தலைமையில் பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், மாநகராட்சி தொடர்பான அனைத்து ஆவணங்களும் தனது பார்வைக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்றும் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் மாநகராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் தனித்தனியாக குழுக்களை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி குப்பை கழிவு நிர்வாகம், சாலை மேம்பாடு, ஓ.எப்.சி. கேபிள் வயர்கள் பதிப்பு, பெரிய கால்வாய் பணிகள், நகர திட்டங்களுக்கு அனுமதி, ஸ்மாட் சிட்டி திட்ட பணிகள், வார்டு அளவிலான திட்ட பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முறைகேடுகள் நடந்திருந்தால் அதற்கான ஆவணங்களுடன் 30 நாட்களுக்குள் அறிக்கை வழங்க வேண்டும். குப்பை கழிவு திட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உஜ்வல்குமார் கோஷ், சாலை மேம்பாட்டு பணிகள், ஓ.எப்.சி. கேபிள் வயர் பதிக்க அனுமதி வழங்குவது தொடர்பான விஷயங்கள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி அம்லான் ஆதித்ய பிஸ்வாஸ், பெரிய கால்வாய் திட்ட பணிகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜாபர், ஏரி மேம்பாட்டு பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள், வார்டு அளவிலான பணிகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி விஷால் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி அனுமதி

இந்த குழுவில் மாநகராட்சி ஓய்வுபெற்ற அதிகாரிகள் இடம் பெற்றுள்ளளனர். திட்ட பணிகளுக்கு சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டதா?, டெண்டர் பணிகள் விஷயத்தில் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா?, தகுதியற்றவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டதா? என்பது உள்பட 16 அம்சங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தும்படி அந்த குழுக்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com