

புதுடெல்லி
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகள் இன்று நேரில் சந்தித்து பேசினர்.
அப்போது தேச கட்டமைப்பின் பணியில் அவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என அவர்களிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு குறிப்பிட்டார் என்று ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது. தற்போது அவர்கள் மாவட்ட அல்லது மாநில முன்னுரிமைகளை கடந்த நிலையில், பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கின்றனர் என குறிப்பிட்ட ஜனாதிபதி முர்மு, இந்த மிக பெரிய பொறுப்புக்கு, துறை சார்ந்த எல்லையை கடந்த ஒரு பார்வை உங்களுக்கு தேவைப்படுகிறது என்று கூறினார்.
நீங்கள் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது அமைப்பின் ஒத்திசைவை மேம்படுத்த முடிவதுடன், அரசு நிர்வாகத்தின் இயக்க திறனையும் வலுப்படுத்த முடியும் என கூறினார். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கட்டமைப்பை உருவாக்கும் ஒட்டுமொத்த பார்வையை நினைவுபடுத்தும் வகையில் அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.