பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ள நோட்டு புழக்கம் மற்றும் சந்தேக பணப்பரிமாற்றம் போன்றவை அதிகரித்து இருப்பதாக நிதி புலனாய்வுப்பிரிவு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கள்ளநோட்டு புழக்கம், சந்தேக பணப்பரிமாற்றம் அதிகரிப்பு
Published on

புதுடெல்லி,

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கம், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி போன்றவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கைக்குப்பிறகு கள்ள நோட்டு புழக்கமும், சந்தேக பணப்பரிமாற்றமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

நிதி புலனாய்வு பிரிவின் (எப்.ஐ.யு.) நிதி மோசடி தடுப்பு சட்டங்களின் படி, அரசு மற்றும் தனியார் வங்கிகள், கூட்டுறவு துறை மற்றும் பிற நிதி நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் நிறுவனங்களில் பதிவாகும் கள்ளநோட்டு பரிமாற்றங்கள் மற்றும் சந்தேக பரிவர்த்தனைகள் குறித்து எப்.ஐ.யு.விடம் அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அளிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் தான் எப்.ஐ.யு. தற்போது அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையின்படி கள்ளநோட்டு பரிமாற்றங்கள் கடந்த 2016-17-ம் ஆண்டில் (பணமதிப்பு நீக்கத்துக்குப்பின்) 7.33 லட்சம் முறை நிகழ்ந்துள்ளது. இது 2015-16-ம் ஆண்டில் 3.22 லட்சமாக இருந்து இருக்கிறது.

இது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். எனினும் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளின் மதிப்பு எவ்வளவு? என்பது குறித்து அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.

இதைப்போல சந்தேக பணப்பரிமாற்றங்களை பொறுத்தவரை 480 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாகவும் எப்.ஐ.யு. அறிக்கை தெரிவிக்கிறது. அதன்படி 2016-17-ம் ஆண்டில் 4,73,006 முறை இத்தகைய பரிமாற்றம் நடந்திருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 4 மடங்குக்கும் அதிகம் என தெரிய வந்துள்ளது.

இத்தகைய சந்தேக பரிமாற்றங்கள் பெரும்பாலும் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம் எனவும் எப்.ஐ.யு.வின் அறிக்கை தெரிவிக்கிறது.

இப்படி கள்ளநோட்டு புழக்கம் மற்றும் சந்தேக பரிமாற்றங்கள் அதிகரிப்பதற்கு பணமதிப்பு நீக்கமே காரணம் என்று கூறியுள்ள எப்.ஐ.யு., இத்தகைய விளைவுகளை அடுத்தடுத்த ஆண்டுகளிலும் காண முடியும் என்றும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com