

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் தொற்றின் மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஒவ்வொரு நாளும் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சராசரியாக 1000 பேர் உயிரிழக்கின்றனர்.
இதை முடிவுக்கு கொண்டு வருவதில் தடுப்பூசிதான் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் தடுப்பூசி எப்போது வரும் என மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தியாவில் உள்நாட்டில் 2 தடுப்பூசிகள் நம்பகரமாக உள்ளன. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடிலா நிறுவனத்தார், ஜைகோவ் டி என்ற தடுப்பூசியை தயாரித்து இருக்கிறார்கள்.
இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் கரம் கோர்த்து ஒரு தடுப்பூசியை (கோவிஷீல்டு) உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரித்து வினியோகிப்பதற்கு புனேயில் உள்ள இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் போட்டுள்ளது.
கோவேக்சின் மற்றும் ஜைகோவ் டி தடுப்பூசிகளை முதல் கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற பரிசோதனை முடிந்துள்ளது, இரண்டாவது கட்ட பரிசோதனையும் தொடங்கி இருக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா சமீபத்தில் அறிவித்துள்ளார்.
அதே போன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் அடுத்த சில நாட்களில் தொடங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்பது தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், டுவிட்டரில் இந்தியில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், எல்லாம் சரியாக நடந்துவிட்டால், இந்தியா இந்த ஆண்டு இறுதிக்குள் (டிசம்பருக்குள்) தடுப்பூசியை பெற்று விடும் என்று நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே தடுப்பூசிகள் தொடர்பான தகவல்களை ஆங்கிலத்திலும், பிற மாநில மொழிகளிலும் வழங்கக்கூடிய ஒரு இணையதளத்தை உருவாக்கும் பணியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி அதன் தொற்று நோயியியல் பிரிவு தலைவர் சமிரான் பாண்டா கூறும்போது, இந்த இணையதளத்தின் நோக்கம், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி உருவாக்கம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்குவதுதான். இதில் பதிவேற்றம் செய்யப்படுகிற புதிய தகவல்கள் அனைத்தும் பிராந்திய மொழிகளில் கிடைக்கச்செய்யப்படும். அதன் நோக்கம், இந்த தகவல்களை ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொள்வதை உறுதி செய்வதுதான் என குறிப்பிட்டார்.