இந்தியாவுடன் இயல்பான உறவை சீனா விரும்பினால்... மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்

எல்லையில் அமைதி பாதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியாவுடன் இயல்பான உறவை சீனா விரும்பினால்... மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்
Published on: 

புதுடெல்லி

இந்தியாவுடன் இயல்பான உறவை சீனா விரும்பினால் அதற்கு மேற்கொள்ள வேண்டிய விசயங்கள் பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதிலளித்து உள்ளார்.

டெல்லியில் புதிய பொருளாதார கருத்தரங்கு என்ற பெயரில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.

45 ஆண்டுகள்

அவர் பேசும்போது, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே ஒப்பந்த அடிப்படையிலான எல்லை என்று எதுவும் இல்லை. எல்லைப்பகுதி வேண்டும் என்று பல தசாப்தங்களாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. 1975-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 45 ஆண்டுகள் வரை எல்லையில் ரத்தம் சிந்தும் வகையிலான மோதல்கள் இல்லை.

இந்த காலகட்டத்தில் இரு நாடுகள் இடையே உறவுகள் வளர்ந்தன. கடைசியாக 1975-ம் ஆண்டு உயிரிழப்பு ஏற்படும் அளவிலான மோதல்கள் நடந்தன.

கொரோனா ஊரடங்கு

அதன்பின்னர் 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு மத்தியில் இருந்தோம். தொடர்ச்சியாக எல்லை விவகாரங்களை நாம் எதிர்கொண்டோம். அதன் முடிவாக இரு தரப்பிலும் வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர் என்றார். எல்லையில் அமைதி பாதிக்கப்பட்டால், அதன் விளைவுகள் உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதனை நாம் தெளிவாக காண முடிந்தது. நாம் அமைதியை மீட்டெடுக்கும் வரை இந்த நிலை தொடர்ந்தது. பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுவதற்கு 4 ஆண்டுகள் ஆகி விட்டன என்றார்.

அதனால், இந்தியாவுடன் இயல்பான உறவை சீனா விரும்பினால், இரு நாடுகளின் இடையேயும் எல்லை பகுதியில் ஸ்திரத்தன்மை நீடிக்க வேண்டும் என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com