என்டிஏ கூட்டணியில் சேர்ந்தால் அதிக நிதி கிடைக்கும்: மத்திய மந்திரி பேச்சால் சர்ச்சை

Photo Credit : ANI
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பினராயி விஜயன் இணைந்தால் கேரளாவிற்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று ராம்தாஸ் அத்வாலே கூறினார்.
புதுடெல்லி:
மத்திய சமூக நீதித் துறை இணை மந்திரி ராம்தாஸ் ஆத்வாலே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இணைந்தால் புரட்சிகரமான நடவடிக்கையாக இருக்கும். இதன்மூலம் கேரளாவிற்கு கட்டாயம் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி கேரளாவிற்கு மிகப்பெரிய தொகுப்பு திட்டத்தை அறிவிப்பார். அதனை மாநிலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தலாம்” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டணியில் இணைநதால் அதிக நிதி கிடைக்கும் என்ற ரீதியில் மத்திய மந்திரி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராம்தாஸ் ஆத்வாலேவின் பேச்சை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன்:
“மத்திய மந்திரியின் பேச்சு ஜனநாயகத்துக்கு விரோதமாகவும், அரசியலமைப்புக்கு முரணாகவும் உள்ளது. இந்திய கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். இது அனைத்து அரசியலமைப்பு நிறுவனங்களையும் ஆர்.எஸ்.எஸ். காலடியில் கொண்டுவரும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்” என்று சாடினார்.






