பெண் வயதுக்கு வந்த உடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் - எம்.பி. சர்ச்சை பேச்சு

வயதுக்கு வந்த உடன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எம்.பி. சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
பெண் வயதுக்கு வந்த உடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் - எம்.பி. சர்ச்சை பேச்சு
Published on

புதுடெல்லி,

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21- ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்தது.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21-ஆக உயர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது.

இந்நிலையில், பெண் வயதுக்கு வந்த உடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எம்.பி. தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21-ஆக உயர்த்தும் மத்திய அரசின் முடிவு தொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. சயது துபெய்ல் ஹசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எம்.பி. ஹசன், வயதுக்கு வந்த உடன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். வயதுக்கு வந்த பெண் 16 வயதில் திருமணம் செய்துகொண்டாலும் தவறில்லை. பெண் 18 வயதில் வாக்களிக்கும்போது ஏன் அதேவயதில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?.

பெண் கருவுற்றல் வயதை அடைந்த உடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன். 16 வயதில் பெண் வயதிற்கு வந்தால் 16 வயதில் திருமணம் செய்துகொள்ளலாம். 18 வயதில் பெண் வாக்களிக்கும்போது ஏன் திருமணம் செய்துகொள்ளக்கூடாது? என்றார்.

அதேபோல், மற்றொரு சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான ஷபீக்கியூர் ரஹ்மான், பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 21- ஆக உயர்த்தபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஹ்மான் கூறுகையில், இந்தியா ஒரு ஏழை நாடு. அனைவரும் தங்கள் மகள்களை குறைவான வயதிலேயே திருமணம் செய்துவைக்க நினைக்கின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதாவை நான் நாடாளுமன்றத்தில் ஆதரிக்கமாட்டேன் என்றார்.

இவர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com