

புவனேஷ்வர்,
யோகா ஒடிசாவின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியில் நடந்த நலத்திட்ட துவக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;
இன்று, ஒடிசாவின் மகள் (ஜனாதிபதி திரவுபதி முர்மு) நாட்டின் இவ்வளவு உயர்ந்த பதவியை அடைந்து, நம்மை வழிநடத்தி வருகிறார். இது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம்.
இன்று எனக்கு ஒரு மிகவும் சிறப்பான நாள். ஏனெனில், ஜனாதிபதி முர்முவின் கிராமத்திற்குச் சென்று, அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
இன்று ஒடிசா வளர்ச்சியின் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி மூலம் இந்தியாவை உருவாக்குவதே மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையாகும். அதனால்தான் நாங்கள் பூர்வோதயா கொள்கையின் கீழ் செயல்பட்டு வருகிறோம். காங்கிரஸ் காலத்தில் பின்தங்கிய நிலைக்கு அடையாளமாக இருந்த வடகிழக்கு இந்தியா, இப்போது முன்னேற்றத்திற்கான நுழைவாயிலாக மாறி வருகிறது.
இன்று, ஒடிசாவின் வளர்ச்சி தொடர்பான பல முக்கியமான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்காக சுமார் 47,000 கோடி ரூபாய் செலவிடப்படும்.
வரவிருக்கும் காலங்களில் நமக்கு இரண்டு முக்கிய மைல்கற்கள் உள்ளன. 2036-ல் ஒடிசா மாநிலம் உருவான நூற்றாண்டு விழாவையும், 2047-ல் இந்தியா தனது சுதந்திர நூற்றாண்டு விழாவையும் கொண்டாடும். இதன் பொருள், ஒடிசாவின் இலக்குகளும் நாட்டின் இலக்குகளும் ஒரே திசையில் செல்கின்றன என்பதாகும். ஒடிசாவின் பொருளாதாரம் வலுவாக இருந்தால், இந்தியாவும் வலுவாக இருக்கும்.
சர்வதேச யோகா தினமும் நாளை, ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது... யோகா ஒடிசாவின் கலாசாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஒடிசா மண்ணின் சார்பாக, நாடு முழுவதிலும் உள்ள மக்களுக்கும், உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், நீங்கள் அனைவரும் யோகா தினத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.