

பெட்ரோலுடன் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்து பயன்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இதை மேலும் அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, 100 சதவீத எத்தனால் வரையிலான அதாவது இ100 (ஏறக்குறைய சுத்தமான எத்தனால்) வாகனங்களுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து இருப்பதாக கடந்த 26-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்கும் உடனடி திட் டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி 27-ந்தேதி தெரிவித்தார்.
இந்த நிலையில் எத்தனால் வினியோக ஆண்டு 2025-26-க்கான எத்தனால் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சுந்தரேஷ், பிர சன்னா வரலே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 100 சதவீத எத்தனால் பயன்பாடு தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் கூறும்போது, '100 சதவீத எத்தனால் வாகன பயன்பாட்டுக்கு அனுமதி அளித்திருப்பதாக செய்தித்தாள்களில் பார்த்தோம். 100 சதவீதம் எத்தனால் கொண்டு இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால், அதற்கான எத்தனால் வினியோகத்தை நீங்கள் எவ்வாறு மேற்கொள்வீர்கள்? என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்' என்று தெரிவித்தனர்.அதற்கு பதிலளித்த அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி, 'அதற்கு பெரிய அளவிலான உற்பத்தி மறுசீரமைப்புகள் தேவைப்படும்' என்றார்.
முன்னதாக இந்த வழக்கில் ஆஜராகி இருந்த வக்கீல் ஒருவர் கூறும்போது,'எத்தனால் ஊக்குவிப்பு, விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவும்' என்றார். அதை ஆமோதித்த நீதிபதிகள், நாட்டின் விவசாயிகளை வலுப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தினர்.குறிப்பாக நீதிபதி சுந்தரேஷ் கூறும்போது, 'நாட்டின் பெரும்பான்மையான மக்களான விவசாயிகளின் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். விவசாயிகளுக்கு எப்படி அதிகாரம் அளிப்பது என்ற பிரச்சினைக்கு நாம் தீர்வு காண வேண்டும். இது யாரும் முன்னிலைப்படுத்தாத ஒரு அம்சமாகும்' என்று தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.