

பெயர் மாற்றும் விவகாரம்
அவுரங்காபாத் பெயரை மாற்ற வேண்டும் என்று பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சிவசேனா கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மராட்டிய காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் நானா படோலே நேற்று அவுங்காபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது இதுகுறித்து கேட்டதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
மக்கள் பிரச்சினை தீருமா?
அவுரங்காபாத் விமான நிலையத்தின் பெயரை மாற்றுவது தொடர்பான தீர்மானம் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. ஆனால் பா.ஜனதா அதை ஏன் செய்யவில்லை. அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்றுவதால் மக்கள் பிரச்சினை தீர்ந்து விடும் என்றால், அதனை காங்கிரஸ் ஆதரிக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு விண்ணை முட்டி உள்ளது. இது மக்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்து வருகிறது. ஆனால் இந்த பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு முன்வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வெள்ளை அறிக்கை
மராட்டியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை சிவசேனா தலைவர்கள் தடுப்பதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கடிதம் எழுதியது பற்றி நானா படோலேயிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "மராட்டியத்தில் நிதின் கட்காரியால் செய்யப்படும் பணிகள் குறித்து அவர் தணிக்கை செய்ய வேண்டும். மேலும் அவர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்றார்.