சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது காலணி வீசியவர் முஸ்லிம் என்றால்... கொளுத்தி போட்ட ஒவைசி

குற்றவாளி ஆசாத் என்றால், அவரை அண்டை நாட்டுடன் (பாகிஸ்தான்) பா.ஜ.க. தொடர்புபடுத்தி இருக்கும் என்றும் ஒவைசி ஆவேசத்துடன் கூறினார்.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், வழக்கறிஞர் ராகேஷின் காலணியை எடுத்து போலீசார் அவரிடமே திருப்பி கொடுத்து விட்டனர். இந்நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி செய்தியாளர்களிடம் இன்று மதியம் பேசும்போது, ஒருவேளை காலணியை ஆசாத், தூக்கி வீசியிருந்தால் நிலைமை வேறு வகையாக இருந்திருக்கும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்த சம்பவத்தின்போது, ,பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசிடம் டெல்லி போலீசார் அறிக்கை அளித்தனர். இதில், ராகேஷ் கையாளப்பட்ட விதம் பற்றி டெல்லி போலீசாரை அவர் கடுமையாக சாடினார். அவர் கூறும்போது, ராகேஷை டெல்லி போலீசார் கைது செய்யவில்லை. ஏனெனில் அவருடைய பெயர் ராகேஷ் கிஷோர்.
அவருடைய பெயர் ராகேஷ் என்றில்லாமல் ஆசாத் என்றிருப்பின், டெல்லி போலீசார் என்ன செய்திருப்பார்கள்? என்று கேள்வி எழுப்பினார். அவர்கள் ஏன் உபா சட்டம் பிரயோகிக்கவில்லை. இந்த விசயத்தில், ஏன் கடுமையான பயங்கரவாத ஒழிப்பு சட்டம் பயன்படுத்தப்படவில்லை? என்றும் ஒவைசி கேட்டுள்ளார். குற்றவாளி ஆசாத் என்றால், அவரை அண்டை நாட்டுடன் (பாகிஸ்தான் நாட்டுடன்) பா.ஜ.க. தொடர்புபடுத்தி இருக்கும் என்றும் ஒவைசி அப்போது ஆவேசத்துடன் கூறினார்.
கடந்த 6-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கம்போல் கூடியது. வழக்குகளின் விவரங்களை வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு வந்தனர். அவற்றை நீதிபதிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், நீதிபதிகள் அமர்ந்துள்ள மேடையை நெருங்கி தனது காலணியை கழற்றி, தலைமை நீதிபதியை நோக்கி வீச முயன்றார்.
இதனை கவனித்த காவலாளிகள், உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர். கோர்ட்டில் இருந்து அவரை வெளியேற்றினர். அப்போது அவர், சனாதன தர்மம் இழிவுபடுத்தப்பட்டால் அதனை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று கூச்சலிட்டபடி வெளியேறினார். இதனை தொடர்ந்து, ராகேஷின் வழக்கறிஞர் உரிமம் தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்படுகிறது என பார் கவுன்சில் அறிவித்தது.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மீது காலணி வீசிய வழக்கறிஞர் பெயர் ராகேஷ் கிஷோர் (வயது 71). டெல்லி மயுர் விஹார் பகுதியை சேர்ந்தவர். இந்த சம்பவம் பற்றி ராகேஷ் கூறும்போது, கடந்த செப்டம்பர் 16-ந்தேதி தலைமை நீதிபதியின் அமர்வில் கஜுராஹோவில் உள்ள ஜவாரி கோவிலில் உள்ள விஷ்ணுவின் சிலையை மீட்டெடுக்க கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி கவாய், 'சிலையை மீட்டெடுக்க கடவுளிடம் சென்று பிரார்த்தனை செய்யுங்கள்' என்று கேலி செய்து மனுவை தள்ளுபடி செய்தார். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு என்னை காயப்படுத்தியது. நீங்கள் நிவாரணம் வழங்க விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் கேலி செய்யாதீர்கள்.
அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது அநீதி. இருப்பினும், நான் வன்முறையை எதிர்க்கிறேன். ஆனால், அது அவரது செயலுக்கான எனது எதிர்வினை. நான் அதற்காக பயப்படவில்லை, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நானாக எதுவும் செய்யவில்லை. கடவுள் என்னை அதனை செய்ய வைத்தார். கடவுள் சொல்லித்தான் செய்தேன். இதற்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என்றார்.






