‘விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும்’ - மோடி அரசுக்கு ராம்தேவ் எச்சரிக்கை

விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்தாவிட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும் என ராம்தேவ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
‘விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும்’ - மோடி அரசுக்கு ராம்தேவ் எச்சரிக்கை
Published on

புதுடெல்லி,

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யோகா குரு ராம்தேவ், இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:-

மோடி அரசின் கொள்கைகளை ஏராளமானோர் பாராட்டி உள்ளனர். ஆனால் சில கொள்கைகளை திருத்தியமைக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் விலைவாசி, மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. எனவே இதை மோடி உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை உடனே தொடங்க வேண்டும். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்து, அதற்கு குறைவான வரி விதிக்க வேண்டும்.

இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறினால் மோடி அரசு மிகப்பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும்.

நான் வலதுசாரியும் இல்லை, இடதுசாரியும் இல்லை. மாறாக ஒரு நடுநிலைவாதி. வலுவான தேசியவாதியும் கூட. முக்கியமான பிரச்சினைகள் பலவற்றில் நான் மவுனம் சாதித்ததால், நான் யாருக்கும் தேவையில்லை.

2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்யப்போவது இல்லை. அரசியலில் இருந்து விலகிவிட்டேன். அனைத்து கட்சிகளுடனும் நான் இருக்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன்.

தூய்மை இந்தியா போன்ற திட்டங்களை செயல்படுத்தியும், பெரிய ஊழல் எதுவும் நடக்க அனுமதிக்காமலும் பிரதமர் மோடி சிறப்பாக செயலாற்றுகிறார். எனினும் அவரை விமர்சிப்பது மக்களின் அடிப்படை உரிமை ஆகும். இவ்வாறு ராம்தேவ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com