அரசு சார்பில் திப்பு ஜெயந்தி கொண்டாடினால், கர்நாடகத்தில் 9-ந்தேதி போராட்டம் - பா.ஜனதா எச்சரிக்கை

கர்நாடக அரசு சார்பில் திப்பு ஜெயந்தி கொண்டாடினால் பா.ஜனதா சார்பில் 9-ந்தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு சார்பில் திப்பு ஜெயந்தி கொண்டாடினால், கர்நாடகத்தில் 9-ந்தேதி போராட்டம் - பா.ஜனதா எச்சரிக்கை
Published on

மைசூரு,

மைசூரு புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கர்நாடகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் வருகிற 10-ந்தேதி திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை கர்நாடக அரசு சார்பில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மைசூருவுக்கு நேற்று முன்தினம் வந்த முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான ஆர்.அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாட ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த காலங்களில் திப்பு ஜெயந்தி விழாவில் பங்கேற்க கேரள மாநிலத்தில் இருந்து முஸ்லிம் அமைப்புகள் இங்கே வந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடந்தால், மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.

கர்நாடக அரசு சார்பில் 10-ந்தேதி திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாடினால் பா.ஜனதா சார்பில் 9-ந்தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கிறேன். கூட்டணி ஆட்சி அமைந்து 5 மாதங்கள் ஆகிறது. ஆனால் இன்னும் இந்த அரசு செயல்படத் தொடங்கவில்லை. முதல்-மந்திரி குமாரசாமி தான் செல்லும் இடங்களில் மக்கள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுகிறார். விவசாயிகளின் கடனை இதுவரை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் தனது இஷ்டத்துக்கு அவர் ஆட்சி நடத்தி வருகிறார். அரசின் கஜானா காலியாகிவிட்டது. இதனால் ஆட்சி நடத்த அவர் பரிதவித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com