

புதுடெல்லி,
2019-ல் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் உள்பட 18 கட்சிகள் கூட்டணி அமைக்க திட்டமிட்டு உள்ளன. டெல்லியில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை பிரதமர் மோடி, பாரதீய ஜனதாவிற்கு எதிராக முன்வைத்தார்.
பிரதமர் மோடியின் திட்டங்கள் குறித்து பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடி போகும் இடமெல்லாம் பொய்தான் பேசுகிறார் என சாடினார்.
பிரதமர் மோடி நமக்கு மேக் இன் இந்தியா திட்டத்தை கொடுத்து உள்ளார், ஆனால் பெரும்பாலான பொருட்கள் சீன தயாரிப்பாகவே உள்ளது. பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்துவிட்டது. பிரதமர் மோடி தூய்மை இந்தியாவிற்கு வலியுறுத்துகிறார். ஆனால் நாம் நேர்மையான இந்தியாவை கேட்கிறோம். இந்த நாடு எங்களுடையது என ஒரு தரப்பு கூறுகிறது. மற்றொரு தரப்பு நாங்கள் இந்நாட்டை சேர்ந்தவர்கள் என்றது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்.க்கும் நமக்கும் உள்ள வேறுபாடாகும். ஆர்.எஸ்.எஸ்.க்கு தெரியும் அவர்களுடைய கொள்கையால் வெற்றிப்பெற முடியாது என, எனவே அவர்களுடைய நபர்களை ஒவ்வொரு அமைப்பிலும் நிலை நிறுத்துகிறது என ராகுல் காந்தி பேசினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்திய அரசியலமைப்பை சிதைக்கும் எனவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டிஉள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத் பேசுகையில் மதசார்பற்ற பாதையை தேர்வு செய்த சரத் யாதவிற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.
சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியே உண்மையான ஐக்கிய ஜனதா தளம், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் பாரதீய ஜனதாவின் ஐக்கிய ஜனதா தளமாகும் என விமர்சனம் செய்தார் குலாம் நபி ஆசாத்.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினால் அவர்களை (பாரதீய ஜனதாவை) எங்கும் பார்க்க முடியாது, என கூறிஉள்ளார் ராகுல் காந்தி.