‘என்னுடன் நேருக்கு நேர் விவாதித்தால், மோடி பிரதமராக நீடிக்க மாட்டார்’ - ராகுல் காந்தி

நாடாளுமன்ற மக்களவையில் தன்னை பேச அனுமதிப்பதில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
‘என்னுடன் நேருக்கு நேர் விவாதித்தால், மோடி பிரதமராக நீடிக்க மாட்டார்’ - ராகுல் காந்தி
Published on: 

புதுடெல்லி,

பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க விரும்புவதாகவும், தன்னுடன் விவாதித்த பிறகு மோடி பிரதமராக நீடிக்க மாட்டார் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நேருக்கு நேர் விவாதம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான ராகுல் காந்தி, தன்னுடன் நேருக்கு நேர் விவாதத்திற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு பலமுறை சவால் விடுத்து வந்துள்ளார். மேலும், பிரதமர் ஒரு 'துரோகி' என்பதை நிரூபிக்க தனக்கு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம்...

ராகுல் காந்தியின் சவாலை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விமர்சித்ததோடு, ‘நாடாளுமன்ற விவாதங்களில் இருந்து ராகுல் காந்தி ஓடி ஒளிகிறார்’ என்று குற்றம் சாட்டினர். இது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், “விவாதத்திற்கான இடத்தை தேர்வு செய்யுமாறு பிரதமரிடம் ராகுல் காந்தி கூறுகிறார். ஆனால் ஏற்கனவே நாடாளுமன்ற அவையில் விவாதத்திற்கான இடம் இருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி சிறிதளவு பொறுப்புடன் செயல்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

ராகுல் காந்தி பதில்

இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான நேருக்கு நேர் விவாதம் குறித்து ராகுல் காந்தி மீண்டும் பேசியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘என்னிடம் கேளுங்கள்’ என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அப்போது ஒருவர் ராகுல் காந்தியிடம், “நாடாளுமன்றத்தில் விவாதிக்கலாம் என்று பா.ஜ.க. அழைப்பு விடுத்த பிறகும், நீங்கள் ஏன் பிரதமர் மோடியை நேருக்கு நேர் விவாதத்திற்கு வருமாறு அழைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, “நாடாளுமன்ற மக்களவையில் என்னை பேச அனுமதிப்பதில்லை. எனது மைக்கை ஆப் செய்துவிடுகின்றனர். விவசாய மசோதாக்கள், வாக்கு திருட்டு, எஸ்.ஐ.ஆர். பணிகள், சீனா விவகாரம், ஜெனரல் நரவானேயின் புத்தகம், எப்ஸ்டீன் பைல்ஸ் ஆகிய விஷயங்களைப் பற்றிப் பேச என்னை அவர்கள் அனுமதிக்கவில்லை.

விவாதத்திற்கு வரலாம்...

எனக்கு நேருக்கு நேர் விவாதம் வேண்டும். நீண்ட உரைகளைக் கொண்ட விவாதம் எனக்கு வேண்டாம். நரேந்திர மோடி என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும், நானும் அவர் மீது அதையே செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அவர் விவாதத்திற்கு வரலாம்; அங்கே ஒரு மேசை இருக்கும், அதன் ஒருபுறம் நரேந்திர மோடியும், மறுபுறம் நானும் இருப்போம்.

அந்த விவாதத்திற்கு அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி அல்லது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நடுவராக நியமிக்கப்பட்டாலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், என்னுடன் நேருக்கு நேர் விவாதித்த பிறகு, மோடி பிரதமராக நீடிக்க மாட்டார் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

X