நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்பினால்... ராகுல் காந்திக்கு அமித்ஷா கூறிய அறிவுரை என்ன?

ஒட்டுமொத்த உலகமே புகழக்கூடிய பிரதமர் மோடியை அவமதிப்பு செய்ய முயற்சித்து கொண்டிருக்கிறீர்கள்.
அமித்ஷா
Published on: 

புனே

நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்று ராகுல் காந்திக்கு அமித்ஷா அறிவுரை வழங்கியுள்ளார்.

மராட்டியத்தின் புனே நகரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.

ரூ.12 லட்சம் கோடி ஊழல்

அவர் பேசும்போது, தொடர்ந்து 3 மக்களவை தேர்தல்களில் தோல்வியை தழுவிய பின்னர், காங்கிரஸ் கட்சி அதனுடைய ஏமாற்றங்களை பல்வேறு வழிகளில் வெளியிட்டு வருகிறது. தேர்தல்களில் போட்டியிடுவது, தோல்வியடைவது மற்றும் வெற்றி பெறுவது என்பது கட்சி தலைவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் நடப்பது ஆகும்.

உங்களுக்கு 10 ஆண்டுகள் வரை வாய்ப்பு தரப்பட்டது. நீங்கள், ஊழல்கள் செய்தீர்கள். ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு ஊழலில் ஈடுபட்டீர்கள். நாட்டு மக்கள் உங்கள் கைகளை பிடித்து, அரசில் இருந்து தூக்கி எறிந்து விட்டார்கள். மோடியை பிரதமராக்கி விட்டார்கள்.

அறிவுரை

இந்த 12 ஆண்டுகளில், 4 அணாக்கள் மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டு ஒன்று கூட பிரதமர் மோடிக்கு எதிராக கூறப்படவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ராகுல் காந்திக்கு நான் சிறிய அறிவுரை ஒன்றை வழங்க விரும்புகிறேன். வெளிநாட்டு தளங்களில் இதுபோன்று இந்தியாவுக்கு எதிராக அவதூறு பேசிக்கொண்டு, உங்களால் ஆட்சியை பிடிக்க முடியாது.

அவமதிக்க முயற்சி

நீங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினால், உங்களுடைய வெளிநாட்டு பயணங்களை நிறுத்துங்கள். இந்தியாவின் கிராமங்களுக்கு பயணம் செய்யுங்கள். அதன்பின்னர், உங்களுக்கான ஒரு நாள் வரக்கூடும் என குறிப்பிட்டார்.

நீங்கள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால், ஒட்டுமொத்த உலகமே புகழக்கூடிய பிரதமர் மோடியை அவமதிப்பு செய்ய முயற்சித்து கொண்டிருக்கிறீர்கள். உலகத்தின் முன்னால், இந்தியாவின் வளர்ச்சிக்கான பயணத்திற்கு எதிராக அவதூறு பரப்ப முயற்சித்து கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

X