டெல்லி ஐஐடியில் விரைவில் வடிவமைப்பு பள்ளி துவங்கப்படும் - இயக்குநர் தகவல்

புதுடெல்லியிலுள்ள ஐஐடி பொறியியல் படிப்பிற்காக புகழ்பெற்றது. விரைவில் இங்கு வடிவமைப்பு பள்ளி ஒன்றும் துவங்கப்படவுள்ளதாக அதன் இயக்குநர் ராம்கோபால் ராவ் தெரிவித்தார்.
டெல்லி ஐஐடியில் விரைவில் வடிவமைப்பு பள்ளி துவங்கப்படும் - இயக்குநர் தகவல்
Published on

புதுடெல்லி

இதற்கான பரிந்துரையை ஐஐடி செனட் அங்கீகரித்துள்ளது. அடுத்து நிர்வாகக் குழுவிடம் ஒப்புதலுக்கு செல்லவுள்ளது. இது பற்றி ராம்கோபால் ராவ் கூறுகையில், இயந்திரங்களோ அல்லது கருவிகளோ அவற்றின் உள்ளே என்ன இருக்கிறது என்பது பொறியாளர் வடிவமைப்பினை சார்ந்தது. ஆனால் ஒரு மொபைல் போனை எடுத்துக் கொண்டால், அதன் வெளிப்புறம் எப்படியிருக்க வேண்டும், எப்படி தோற்றமளிக்க வேண்டும், எங்கு, எப்படி பட்டன்களைப் பொருத்த வேண்டும், இதற்கெல்லாம் ஒரு பொறியாளர் கடினப்பட்டு வடிவமைக்க இயலாது. அதற்காக ஒரு சிறப்புப் பயிற்சி பெற்றவர் தேவை. அதற்காக டெல்லி ஐஐடி வடிவமைப்புப் பள்ளி ஒன்றை நிறுவுகிறது.

இங்கு வடிவமைப்பு இளங்கலை நான்காண்டுகளுக்கும், முதுகலை இரண்டாண்டுகளுக்கும் கற்பிக்கப்படும். வடிவமைப்புக் கலைக்கு தனியே நுழைவுத் தேர்வுள்ளது; இதில் இப்பள்ளியும் இணையும். இப்போதும் டெல்லி ஐஐடி முதுகலை வடிவமைப்புக் கல்வியை அளித்து வருகிறது. அத்துறையில் நான்கு பேராசிரியர்கள் மட்டுமேயுள்ளனர். மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். பள்ளியை முழு அளவில் துவங்கிய பின்னர் அதிகமாக இளங்கலை, முதுகலை மாணவர்களை சேர்க்க இயலும். எப்படி தொழில்நுட்ப திட்டங்களில் பேடண்டுகளை உருவாக்கி பின்னர் வணிகம் செய்கிறோமோ அதே போல வடிவமைப்பும் இருக்கும். நடைமுறை ரீதியிலான பயிற்சிக்காக வடிவமைப்பு மாணவர்கள் பொறியியல் மாணவர்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்றார் ராம்கோபால் ராவ்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com