ஐ.ஐ.டி. கான்பூர் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

டிசம்பரில் சொந்த ஊருக்கு செல்வது என முடிவு செய்து இதனை அவருடைய சகோதரியிடம் தொலைபேசி வழியே சைனி கூறியுள்ளார்.
கான்பூர்,
உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் உள்ள கான்பூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி. கான்பூர்) அரியானாவை சேர்ந்த தீரஜ் சைனி (வயது 22) என்ற மாணவர் மின் பொறியியல் பிரிவில் பி.டெக் இறுதியாண்டு படித்து வந்திருக்கிறார்.
விடுதி அறையில் தங்கி படித்து வந்த சைனி, வருகிற டிசம்பரில் சொந்த ஊருக்கு செல்வது என முடிவு செய்துள்ளார். இதனை அவருடைய சகோதரியிடம் தொலைபேசி வழியே கூறியுள்ளார். இந்நிலையில், அவருடைய விடுதி அறையில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என மற்ற மாணவர்கள் விடுதி நிர்வாகத்தினரிடம் தகவல் அளித்துள்ளனர்.
அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, அவரது விடுதி அறைக்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி, காவல் உதவி ஆணையாளர் (கல்யாண்பூர்) ரஞ்சித் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, மின் விசிறியில் சைனி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய அறையில் இருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என கூறினார்.
அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. அதன் முடிவு வந்த பிறகே மாணவரின் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.






