ஐ.ஐ.டி. காரக்பூர்: பிஎச்.டி. மாணவர் தற்கொலை; ஓராண்டில் 6-வது மரணம்

நடப்பு ஆண்டில் ஐ.ஐ.டி. காரக்பூரில் 5 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர்.
காரக்பூர்,
மேற்கு வங்காளத்தில் உள்ள ஐ.ஐ.டி. காரக்பூரில் ஹர்ஷ்குமார் பாண்டே (வயது 27) என்பவர் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்திருக்கிறார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் முனைவர் (பிஎச்.டி.) படிப்பை படித்து வந்த நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் அவருடைய தந்தை மனோஜ் குமார் பாண்டே தொலைபேசி வழியே மகன் பாண்டேவை தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஆனால், அவருடன் பேச முடியவில்லை. இதனால், ஐ.ஐ.டி.யின் பாதுகாவலர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர்கள் பாண்டேவின் அறைக்கு சென்றபோது, அறையின் கதவு பூட்டப்பட்டு இருந்துள்ளது. உடனடியாக ஹிஜ்லி போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, தூக்கு போட்ட நிலையில் பாண்டே கண்டெடுக்கப்பட்டார்.
அவரை மீட்டு காரக்பூரில் உள்ள பி.சி. ராய் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். நடப்பு ஆண்டில் ஐ.ஐ.டி. காரக்பூரில் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து உள்ளது. அவற்றில் 5 பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளனர்.
கடைசியாக ஜூலையில், மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா பகுதியை சேர்ந்த சந்திரதீப் பவார் என்ற 2-ம் ஆண்டு எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்த மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 10-ந்தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டபோது, மாணவர்களின் மனநலனை ஊக்குவிக்கும் வகையில், டார்ச் லைட் ஏந்தி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். அவர்களுடன் ஐ.ஐ.டி. காரக்பூர் இயக்குநர் சுமன் சக்ரவர்த்தியும் சென்றார். ஐ.ஐ.டி. காரக்பூர் வளாகத்தில் பல்வேறு முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ள சூழலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.






